லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழுவின் நிர்வாகிப் பதவியிலிருந்து விலகி, பார்சிலோனா குழுவிற்குச் செல்லவுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று மறுத்துள்ளார் மிக்கெல் அர்டேட்டா.
பார்சிலோனா குழுவின் இப்போதைய நிர்வாகியான ஸாவி ஹெர்னாண்டஸ், இப்பருவத்துடன் அக்குழுவிலிருந்து விடைபெற இருப்பதாக இம்மாதம் 27ஆம் தேதி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பார்சிலோனா குழுவின் அடுத்த நிர்வாகியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளோரில் அர்டேட்டாவும் ஒருவராகக் கருதப்பட்டார்.
அதற்கேற்ப, இப்பருவத்துடன் ஆர்சனல் குழுவிலிருந்து வெளியேறி, பார்சிலோனாவிற்குச் செல்லப் போவதாகத் தம் சக ஊழியர்களிடம் அர்டேட்டா கூறியதாக ஸ்பானிய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், “நான் சரியான இடத்தில், சரியானவர்களுடன் இருக்கிறேன். ஆர்சனலில் நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது,” என்று கூறி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அர்டேட்டா.