லண்டன்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் செல்சியை 3-2 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோற்கடித்தது.
தமது ஆட்டக்காரர்கள் செய்த பிழை காரணமாகத் தோல்வியின் பிடியில் சிக்கியதாக செல்சியின் நிர்வாகி லியேம் ரோசினியோர் கூறினார்.
இந்த ஆட்டம் செல்சியின் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இத்தோல்வியின் காரணமாக இறுதி ஆட்டத்துக்கு செல்சி தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
காயம், நோய் காரணமாக செல்சியின் முக்கிய ஆட்டக்காரர்கள் சிலரால் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சனல் அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது.
கடந்த பத்து ஆட்டங்களில் அது தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டும் மான்செஸ்டர் சிட்டியும் மோதுகின்றன. இக்குழுக்களுக்கு இடையிலான அரையிறுதி முதல் ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் சிட்டி வாகை சூடியது.

