நியூகாசல்: கடைசி வரை போராடி தோல்வியைத் தவிர்ப்பதில் முன்னுதாரணமாக விளங்குகிறது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான ஆர்சனல்.
பிரிமியர் லீக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்டம் முடியவிருக்கும் தறுவாயில் கோல் போட்டு ஆர்சனல் தோல்வியைத் தவிர்த்துள்ளது. மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான சென்ற ஆட்டத்தில் கடைசி சில நிமிடங்களில் கோல் போட்டு சமநிலை கண்ட இக்குழு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) நியூகாசல் யுனைட்டெடுக்கு எதிராகக் கடைசி சில நிமிடங்களில் சமநிலை கண்டது மட்டுமின்றி வெற்றி கோலையும் போட்டது.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் நிக் வோல்ட்டமாட நியூகாசலை முன்னுக்கு அனுப்பினார். 84வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் ஆர்சனலின் மிக்கெல் மெரினோ. பின்னர் கூடுதல் நேரத்தின் ஆறாவது நிமிடத்தில் ஆர்சனலின் வெற்றி கோலைப் போட்டார் கேப்ரியெல்.
இந்த எதிர்பாரா வெற்றியைத் தொடர்ந்து ஆர்சனல், லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் லிவர்பூலுக்குப் பின்னால் உள்ளது. முதலிடம் வகிக்கும் லிவர்பூல் சனிக்கிழமை (செப்டம்பர் 27) கிறிஸ்டல் பேலசிடம் தோல்வியடைந்தது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா, ஃபுல்ஹமை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது.
இந்த லீக் பருவத்தில் முதன்முறையாக வெற்றிபெற்றுள்ளது வில்லா. இதற்கு முன்பு நடந்த ஐந்து அட்டங்களில் அக்குழு வெல்லத் தவறியது.