சிங்கப்பூர் காற்பந்துத் திருவிழாவின் முதல் போட்டியில் ஆர்சனல், ஏ சி மிலான், இருதரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய அம்சங்கள் இருந்தன.
ஜூலை 23ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் ஆர்சனல், ஏசி மிலான் அணியை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனால் பெனால்டிகளில் ஏசி மிலான் 6-5 என வென்றது.
2004லிருந்து ஆர்சனல் ரசிகரான ஹமீது, 28, “என் வாழ்வில் மிகப் பிடித்த காற்பந்துக் குழு ஆர்சனல்தான். என் தந்தையும் 1990களிலிருந்து ஆர்சனல் ரசிகர்தான். எனக்குத் தியரி ஹோன்றி ரொம்பப் பிடிக்கும். ஆர்சனல் விளையாடியதைப் பார்த்தபோது மிகவும் பிடித்திருந்தது,” என்றார்.
ஆர்சனல் 2018ல் சிங்கப்பூரில் பிஎஸ்ஜி குழுவுடன் மோதி 5-1 என வென்றபோதும் அப்போட்டியைக் காண வந்திருந்தார் ஹமீது.
“இங்கிலாந்துக்குப் போய் அவர்கள் விளையாடுவதைக் காண்பது கடினம்; அதிக செலவாகும். அதனால் அவர்கள் இங்கு வரும்போது அவர்களைத் தவறாமல் காண வருகிறேன்,” என்றார். இம்முறை ஆர்சனல் அணி அதன் விளையாட்டாளர்களின் உடற்கட்டு, விளையாட்டுத் திட்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது ஒருபுறம், அது வெற்றியும் அடைய வேண்டும் என அவர் விரும்புவதாகக் கூறினார்.
ஏ சி மிலான் ஆதரவாளரான காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி மாணவர் ரூபன், 13, முதன்முறையாக அவர்கள் விளையாடுவதை நேரில் காண வந்திருந்தார். “ஏசி மிலான் வரலாற்றுச் சிறப்புமிக்க அணி. ஏசி மிலான் இங்கு வருவதால் சிங்கப்பூர் காற்பந்து வளரும் என எண்ணுகிறேன்,” என்றார்.
காற்பந்தாட்டம், பெண்களும் விரும்பி விளையாடும், பார்க்கும் விளையாட்டு என்பதற்குச் சான்று உமாராணி, 38. அவர் சிங்கப்பூர் ஆர்சனல் ஆதரவாளர் மன்றத்துடன் வந்திருந்தார்; அவர் கிட்டத்தட்ட $200 கட்டணம் செலுத்தியிருந்தார். “நான் அனைத்து பிரிமியர் லீக் விளையாட்டுகளையும் பார்ப்பேன். எனக்கு ஆர்சனலின் முழக்கவரியும் பிடிக்கும் - ‘ஒற்றுமைமூலம் வெற்றி’. வார இறுதியில் நடக்கும் ஆர்சனல் ரசிகர் சந்திப்புக்கும் செல்லவுள்ளேன்.
“கணினியிலும் காற்பந்து விளையாடுவேன். அப்பொழுது ஏசி மிலான் அணியும் நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் அணி. அதனால்தான் இந்தப் போட்டியைத் தேர்ந்தெடுத்து வந்தேன். சென்ற முறை ஆர்சனல் வந்திருந்தபோதும் வந்தேன். ஆர்சனல் ரசிகர் மன்றத்தின் இடத்தில் முன்பெல்லாம் நாங்கள் ஒன்றாக அமர்ந்து எல்லா போட்டிகளையும் பார்ப்போம்,” என்றார் உமாராணி.
தொடர்புடைய செய்திகள்
போட்டி மற்ற அணியின் ரசிகர்களையும் ஈர்த்தது. மான்செஸ்டர் யுனைடெட் ரசிகரான பாரதி, “நான் 12 வயதிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர். அவர்கள் வராவிட்டாலும், இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியையாவது ஆதரிப்போம் என வந்துள்ளேன்,” என்றார்.
இந்தோனீசியா, மலேசியா போன்ற அண்டை நாட்டு ரசிகர்களும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்துக்கு உந்துதலளித்தன.
இதையடுத்து, ஜூலை 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஆர்சனல், நியூகாசல் அணியைச் சந்திக்கும். ஆர்சனல், நியூகாசல் ரசிகர் சந்திப்புகளும் வார இறுதியில் நடைபெறும்.