எஸ் லீக் காற்பந்து விளையாட்டாளராக விரும்பும் ஆர்சனல் ரசிகர் 16 வயது ஜெடிடியா மைக்கேல் மோகனுக்குத் தன் கனவை நோக்கி அடியெடுத்துவைக்க ஆர்சனல் உதவியுள்ளது.
சிங்கப்பூர் வந்துள்ள ஆர்சனல் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்ற இளம் ஆட்டக்காரர்களில் ஒருவர் ஜெடிடியா.
ஜூலை 24ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் ரெய்ன்ஃபாரஸ்ட் விளையாட்டு நடுவத்தில் ஆர்சனல் பயிற்றுவிப்பாளர்கள் இளையருக்குப் பயிற்சி வழங்கினர்.
என்டியுசி-யு கேர் நிதி (NTUC-U Care Fund) மூலம் ஆதரவுபெறும் குடும்பங்களிலிருந்து 11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 24 இளையர்கள் அதன்வழி பயனடைந்தனர்.
என்டியுசி கிளப்பின் ‘என் தொண்டூழிய நண்பர்’ (My Volunteer Kaki) தொண்டூழியர்க் குழு சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்துடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்தது.
ஒன்றரை மணி நேரப் பயிற்றுவிப்பு அங்கத்தில் ஆர்சனல் இளையர் பயிலகத்தில் கையாளப்படும் ‘வலுவான இளம் கன்னர்’ (Strong Young Gunner) திட்டம் மூலம் இளம் வீரர்கள் பல உத்திகளைக் கற்றுக்கொண்டனர்.
இத்திட்டம், சிறந்த குழு விளையாட்டாளர், திறமையாக நகர்பவர் (Efficient mover), வாழ்நாள் கற்றல், வெற்றியாளர் மனப்பான்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
பங்கேற்றவர்கள் 60 நிமிடம் காற்பந்துப் பயிற்சி மேற்கொண்டபின் தாங்கள் கற்றவற்றை அரைமணி நேரம் போட்டிகளில் பயன்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
“பயிற்றுவிப்பாளர்கள் எங்களை ஊக்கப்படுத்தினார்கள். நாங்கள் என்னென்ன தவறு செய்தோம், எப்படித் திருத்திக்கொள்வது எனக் கற்பித்தார்கள்,” என்றார் ஜெடிடியா.
ஆர்சனல் சிங்கப்பூரில் விளையாடுவதை நேரில் காண இயலாவிட்டாலும் ஏசி மிலான், நியூகாசல் உடனான விளையாட்டுகளை இணையத்தில் காண்பதாக ஜெடிடியா கூறினார். “என் மனங்கவர்ந்த வீரர் புக்காயோ சாக்கா,” என்றார் அவர். உட்லண்டஸ் உயர்நிலைப் பள்ளி மாணவரான அவர், பள்ளிக் காற்பந்து அணியிலும் விளையாடுகிறார்.
பயிற்றுவிப்பு அங்கம் மூலம் பயனடைந்த மற்றொருவர் ராஜேஷ்வரி சண்முகம் சக்தி பிரியா, 18. திடல்தடம் (track & field), சூக்பால் (tchoukball) ஆகிய விளையாட்டுகளில் விளையாடும் அவர், இந்தப் பயிற்றுவிப்பு அங்கம் மூலம் முதன்முறையாகக் காற்பந்து விளையாடக் கற்றுக்கொண்டார்.
“இதற்குமுன் நான் என் சகோதரரின் கைப்பேசியில் ஃபிஃபா போட்டி விளையாடியுள்ளேன்,” என்றார் அவர்.
“இந்தப் பயிற்சிமூலம் கோல்காப்பு குறித்துக் கற்றுக்கொண்டேன். அடிப்படையிலிருந்து கற்பித்தார்கள். பந்தைத் தடுப்பது, உதைப்பது குறித்தும் கற்றுக்கொண்டேன். அதனால், காற்பந்து குறித்து இன்னும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பிறந்துள்ளது,” என்றார் சக்தி பிரியா.