தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அபாரமாக மீண்டுவந்து வென்ற ஆர்சனல்

1 mins read
187c9151-6b1a-43d2-ae11-a339f5e9f65b
சவுத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் மூன்றவாது கோலைப் போட்ட புக்காயோ சாக்கா (இடது). - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் சவுத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் சற்று தடுமாறியபோதும் அபாரமாக மீண்டுவந்து வென்றது ஆர்சனல்.

3-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றிபெற்றது.

ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தின் முற்பாதியில் கோல் ஏதும் விழவில்லை. பிற்பாதியாட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே கேமரன் ஆர்ச்சர் சவுத்ஹேம்டனை முன்னுக்கு அனுப்பினார்.

ஆர்சனலின் கய் ஹாவர்ட்ஸ், கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். அதற்கு சிறிது நேரம் கழித்து கேப்ரியல் மார்ட்டினெல்லி அக்குழுவை முன்னுக்குக் கொண்டு சென்றார்.

ஆர்சனலின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக புக்காயோ சாக்கா தனது குழுவின் மூன்றாவது கோலையும் போட்டார்.

பிரிமியர் லீக்கில் அண்மையில் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் ஒரு வீரர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டபோதும் வெற்றிபெறும் விளிம்பிற்குச் சென்றது. அந்த ஆட்டத்தின் பிற்பாதி முழுவதும் 10 விளையாட்டாளர்களுடன் போராடி 2-2 என சமநிலை கண்டது ஆர்சனல்.

அதே விட்டுக்கொடுக்காத தன்மையையும் உத்வேகத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது ஆர்சனல்.

சனிக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற மற்ற பிரிமியர் லீக் ஆட்டங்கள் சிலவற்றில் லிவர்பூல், கிறிஸ்டல் பேலசை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது, எவர்ட்டனும் நியூகாசல் யுனைடெட்டும் கோலின்றி சமநிலை கண்டன.

விறுவிறுப்பான மற்றொரு லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி, ஃபுல்ஹமை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது.

குறிப்புச் சொற்கள்