லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு (செப்டம்பர் 21) நடக்கவிருக்கும் முக்கியமான ஆட்டத்தில் ஆர்சனல் - மான்செஸ்டர் சிட்டி குழுக்கள் பொருதுகின்றன.
மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவிற்கும் அக்குழுவின் முன்னாள் துணைப் பயிற்றுநரும் இந்நாள் ஆர்சனல் நிர்வாகியுமான மிக்கெல் அர்டேட்டாவிற்குமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
ஆசிரியருக்கும் மாணவருக்குமான இந்த மோதல் கடைசி சில ஆட்டங்களாகத் திசைதிரும்பத் தொடங்கியுள்ளது.
இவ்விரு குழுக்களும் சந்தித்த கடைசிப் பத்து ஆட்டங்களில் முதல் ஆறிலும் மேன்சிட்டி வாகை சூடிய நிலையில், கடைசி நான்கு ஆட்டங்களிலும் ஆர்சனல் தோல்வி காணவில்லை. அதிலும், கடைசிச் சந்திப்பில் ஆர்சனல் 5-1 என்ற கோல் கணக்கில் மேன்சிட்டியைத் துவைத்தெடுத்தது.
உலகின் முன்னணிக் காற்பந்து நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்படும் பெப் கார்டியோலாவிற்குக் கடந்த பருவம் பெருத்த ஏமாற்றமளித்தது. 2024/25 பருவத்தில் மேன்சிட்டியால் ஒரு கிண்ணத்தைக்கூட வெல்ல முடியாததே அதற்குக் காரணம்.
இப்பருவத்தின் தொடக்க ஆட்டத்தில் வென்ற மேன்சிட்டி, அடுத்தடுத்த இரு ஆட்டங்களில் தோற்றுப் போனது. ஆயினும், கடந்த வார இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்டையும் வார நடுப்பகுதியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் இத்தாலியின் நேப்பொலி குழுவையும் வீழ்த்தியது அக்குழுவிற்கு மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளது.
அத்துடன், எர்லிங் ஹாலண்ட் மீண்டும் கோல்மழை பொழியத் தொடங்கியிருப்பதும் மேன்சிட்டிக்குச் சாதகமான அம்சம். ஆட்டத்திறனை மீட்டு, நன்கு விளையாடி வரும் ஃபில் ஃபோடனும், ஜெரமி டோக்குவும் ஆர்சனலுக்குச் சவாலாக விளங்கலாம்.
சொந்த அரங்கில் விளையாடும் ஆர்சனலுக்கு அணித்தலைவர் மார்ட்டின் ஓடகார்ட் களமிறங்குவது கேள்விக்குறிதான். தோள்பட்டைக் காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல, சென்ற மாதம் ஏற்பட்ட தொடைத் தசைநார் காயம் காரணமாகக் கடந்த சில போட்டிகளாக விளையாடாமல் இருக்கும் தாக்குதல் ஆட்டக்காரர் புக்காயோ சாக்கோ களமிறங்குவது குறித்துக் கடைசி நேரத்தில் முடிவெடுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஆயினும், மிக்கெல் மெரினோவும் புதிய வரவான விக்டர் கியோகெரசும் தலைக்காயத்திலிருந்து மீண்டுவிட்டதாக அர்டேட்டா தெரிவித்துள்ளார்.
புள்ளிப் பட்டியலில் தற்போது ஆர்சனல் இரண்டாமிடத்திலும் மான்செஸ்டர் சிட்டி ஏழாமிடத்திலும் உள்ளன.
மற்ற இரு ஆட்டங்களில் சண்டர்லேண்ட் - ஆஸ்டன் வில்லா, போர்ன்மத் - நியூகாசல் யுனைடெட் குழுக்கள் மோதவுள்ளன.