சிங்கப்பூர்க் காற்பந்துத் திருவிழாவை வெற்றியுடன் முடித்தது ஆர்சனல் அணி.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) இரவு தேசிய விளையாட்டரங்கில் நடந்த நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றிபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் நியூகாசல் அணியின் ஆண்டணி இலங்கா (Anthony Elanga) அசத்தலான கோல் அடித்தார்.
அதன்பின்னர் ஆர்சனல் அணி அதிரடியாக விளையாடியது. 33வது நிமிடத்தில் மிக்கல் மெரினோ கோல் அடித்தார்.
அதன்பின்னர் 35வது நிமிடத்தில் நியூகாசல் அணியின் அலெக்ஸ் மர்பி தனது அணிக்கு எதிராகவே கோல் அடித்தார். இதனால் ஆர்சனல் 2-1 என்று முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடின. 58வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை நியூகாசலின் ஜோகப் மர்பி கோலாக மாற்றினார்.
இந்நிலையில், 84வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பெனால்டியை ஆர்சனல் கோலாக மாற்றி ஆட்டத்தை வென்றது.
இந்த ஆட்டத்தை 38,720 ரசிகர்கள் தேசிய விளையாட்டரங்கில் கண்டுகளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
விக்டர் அறிமுகம்
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு சிங்கப்பூர் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் ஆர்சனல் அணிக்குப் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட விக்டர் யெக்கர்ஸ் (Viktor Gyokeres) விளையாட்டு அரங்கிற்கு வந்தார்.
அவரைச் சிங்கப்பூர் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். 27 வயது விக்டர் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஆர்சனலில் இணைந்தார்.
ஆர்சனல் ரசிகர் வெள்ளம் பெருமகிழ்ச்சி
1991ல்தான் முதன்முதல் ஆர்சனல், சிங்கப்பூரில் விளையாடுவதைப் பார்த்தார் திரு பாலசுப்ரமணியம். அன்று அவருக்கு வயது ஐந்து.
இன்றோ அவர் தன் ஐந்து வயது மகன் யஷனை ஆர்சனல் விளையாடுவதைப் பார்க்க அழைத்துவந்திருந்தார்.
“1991ல் போட்டியைத் தொலைக்காட்சியில்தான் பார்க்க என் தாயார் அனுமதித்திருந்தார். என் அண்ணன் போட்டியை நேரில் காணச் சென்றார். ஆர்சனல் லிவர்பூல் அணியுடன் மோதிய ஆட்டம். ஆர்சனல் வென்றது,” என்றார் அவர்.
அவரும் மனைவி குமாரியும் அவர்கள் தம் இரு பிள்ளைகளுடன் ஆர்சனல்-நியூகாசல் ஆட்டத்தைக் காண வந்திருந்தனர். “ஆளுக்கு $200 செலவுசெய்துள்ளோம்,” என்றார் குமாரி.
சென்ற ஆண்டு லண்டன் சென்று ஆர்சனல் விளையாடுவதைக் கண்டிருந்த சித்தார்த்தன், இம்முறை $500 நுழைவுச்சீட்டு வாங்கி ஆர்சனலைச் சிங்கப்பூரில் காண வந்திருந்தார்.
“ஆனால் அதே அனுபவம் இல்லை. லண்டனிலுள்ள சூழலே வேறு மாதிரி இருக்கும்,” என்றார்.
காரை நிறுத்துமிடத்தைத் தேடியே ஆட்டத்திற்குத் தாமதமடைந்துவிட்டார் சித்தார்த்தன். அதனால் நியூகாசல் போட்ட முதல் கோலை அவரால் காண முடியவில்லை.
“தேசிய விளையாட்டரங்கில் காரை நிறுத்த முயன்றோம். ஆனால் தொடக்கத்தில் விடவில்லை. நிறைய கெஞ்சிய பிறகுதான் விட்டார்கள். உள்ளே சென்றால் நிறைய நிறுத்துமிடங்கள் காலியாகத்தான் இருந்தன,” என்றார்.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஷாகுல் ஹமீது விளையாட்டைக் காண வந்திருந்தார். “நான் காற்பந்து ரசிகர். நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்கிறேன்,” என்றார்.
ஆசிக் தன் சக ஊழியர்களிடமிருந்து இரண்டு ஆர்சனல் விளையாட்டுகளுக்கும் $300 நுழைவுச்சீட்டுகள் பெற்றார். “நான் மிகப் பெரிய ஆர்சனல் ரசிகர்,” என்றார் ஆசிக்.