லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் போர்ன்மத்தை 3-2 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது. இந்த ஆட்டம் சனிக்கிழமை (ஜனவரி 3) நடைபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சனல், இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் வலுவான நிலையில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்டன் வில்லாவைவிட அது கூடுதலாக ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு, ஆகக் கடைசியாக 22 ஆண்டுகளுக்கு முன்பு லீக் பட்டத்தை ஆர்சனல் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை லீக் பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று அக்குழு மிகுந்த முனைப்புடன் உள்ளது.
ஆட்டத்தின் முதல் கோலை போர்ன்மத் போட்டு முன்னிலை வகித்தபோதிலும், மனந்தளராமல் போராடி ஆர்சனல் வென்றது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், ஆர்சனல் ஆட்டக்காரர் செய்த பிழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி போர்ன்மத்தின் முதல் கோலைப் போட்டார் இவானில்சன்.
துவண்டுவிடாமல் ஆடிய ஆர்சனல் மூன்று கோல்களைப் போட்டது.
தொடர்புடைய செய்திகள்
போர்ன்மத் இரண்டாவது கோலைப் போட்டும் இறுதி வரை அக்குழுவால் ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போனது.
மீள்திறனை வெளிப்படுத்திய தமது குழுவை வெகுவாகப் பாராட்டினார் ஆர்சனலின் நிர்வாகி மிக்கேல் ஆர்ட்டேட்டா.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) நடைபெறும் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியும் செல்சியும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் சிட்டி வெற்றி பெற்றால் 44 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும்.
மேலும், முதல் இடத்தில் ஆர்சனலுக்கும் இரண்டாவது இடத்தில் இருக்கும் குழுவுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தாயாசம் குறையும்.
ஆர்சனல் தற்போது 48 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.

