லண்டன்: சாம்பின்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் ஸ்பானிய ஜாம்பவானான ரியால் மட்ரிட்டை 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது.
இந்த ஆட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 9) அதிகாலை ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
ஆர்சனலின் வெற்றிக்கு அதன் நட்சத்திர வீரர் டெக்லன் ரைஸ் முக்கிய காரணமாக இருந்தார்.
ஆட்டத்தின் 58, 70வது நிமிடங்களில் ஆர்சனலுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.
இரண்டையும் ரைஸ் எடுத்தார்.
ஃப்ரீ கிக் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பந்தை அவர் வலைக்குள் அனுப்பிய விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
இதற்கு முன்பு அவர் ஃப்ரீ கிக் மூலம் கோல் போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சனலின் மூன்றாவது கோலை மிக்கேல் மெரினோ ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் போட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஆர்சனல் வலுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதியன்று காலிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத்துக்காக ஆர்சனல் குழு ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொள்ளும்.
ஆர்சனல் குழு அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால் அது பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் அல்லது ஆஸ்டன் வில்லாவைச் சந்திக்கும்.