கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதும் இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் புதிய தலைவராக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து, வனிந்து ஹசரங்கா தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
மூத்த வீரர் தினேஷ் சந்திமால் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக்கில் சிறப்பாகச் செயல்பட்டும், இன்னொரு மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூசுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
அசலங்கா தலைமையிலான 16 பேர் கொண்ட அணிக்கு இலங்கை விளையாட்டு, இளையர்துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ ஒப்புதல் அளித்துள்ளார்.
இலங்கையின் பல்லகெலேயில் ஜூலை 27, 28, 30ஆம் தேதிகளில் அப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இலங்கை அணி விவரம்: சரித் அசலங்கா (அணித்தலைவர்), பத்தும் நிஷாங்கா, குஷால் பெரேரா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குஷால் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தாசுன் ஷானக, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷானா, சமிந்து விக்ரமசிங்கே, நுவான் துஷாரா, துஷ்மந்த சமீரா, பினுர ஃபெர்னாண்டோ.

