ஆசியான் காற்பந்துப் போட்டிகளின் அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டத்தில், வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) சிங்கப்பூரும் தாய்லாந்தும் மோதவுள்ளன.
அதைக் காண்பதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் (watch parties) சிங்கப்பூர் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்பில், நுழைவுச்சீட்டுகளின் விலையை உயர்த்தி விற்கும் மறுவிற்பனையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கவேண்டாம் என்று சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) சமூக ஊடகத்தில் கேட்டுக்கொண்டது.
அந்த ஆட்டம் 6,000 இருக்கைகளைக் கொண்ட ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டுகள் விற்று முடிந்துவிட்ட நிலையில் அவை மறுவிற்பனைத் தளங்களில் விற்கப்பட்டுவருவதை அறிவதாகச் சங்கம் தெரிவித்தது.
“நுழைவுச்சீட்டு மறுவிற்பனையை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். மறுவிற்பனையாளர்களிடமிருந்து நுழைவுச்சீட்டுகளை வாங்கவேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் குறிப்பிட்டது.
“அதற்குப் பதிலாக ஆட்டத்தைக் கண்டுகளிப்பதற்கான நிகழ்ச்சிகளில் எங்களுடன் கலந்துகொண்டு மற்ற லயன்ஸ் ரசிகர்களுடன் சேர்ந்து ஆட்டத்தைக் காணுங்கள். இரு ஆட்டங்களையும் அவ்வாறு கண்டுகளியுங்கள்,” என்றும் சங்கம் கேட்டுக்கொண்டது.
அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தை நமது தெம்பனிஸ் நடுவம், வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றம், செங் சான் சமூக மன்றம் உள்ளிட்ட இடங்களில் கண்டுகளிக்கலாம்.
இரண்டாம் ஆட்டம், ஆகஸ்ட் 18ஆம் தேதி தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ராஜமங்களா விளையாட்டரங்கில் நடைபெறும். அதையும் நமது தெம்பனிஸ் நடுவம் உள்ளிட்ட பகுதிகளில் திரையில் காணலாம்.


