ஹனோய்: சிங்கப்பூர் அணி ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்து விருதைத் தற்காக்கும் வியட்னாமுடன் சமநிலை கண்டிருக்கிறது.
ஹனோயில் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடவில்லை.
அதனைத் தொடர்ந்து, ‘ஏ’ பிரிவில் ஏழு புள்ளிகளுடன் முதல் நிலையில் இருக்கிறது சிங்கப்பூர்.
இதற்கு முன்னர் ஆடிய ஆட்டங்களில் சிங்கப்பூர், 2-1 என்ற கோல் கணக்கில் கம்போடியாவையும் 2-0 எனும் கோல் எண்ணிக்கையில் திமோர் லெஸ்டேயையும் வெற்றிகண்டது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இரவு, மை டின் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் போடுவதற்குக் கடுமையாகப் போராடின. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆயினும் திடலில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் காட்டிய திறன் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் அணியின் பயிற்றுவிப்பாளர் கவின் லீ.
“பல அம்சங்கள் நன்றாக இருந்தன. ஆனால் நாங்கள் இங்கு வெற்றிக்காக வந்தோம், அது எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, இது நாங்கள் இன்னும் எடுத்துவைக்க வேண்டிய ஒரு படியாகும்.
“போட்டியின் பெரும்பகுதியில் நாங்கள் நிலைத்து நின்றோம், சில சிறந்த வாய்ப்புகளை உருவாக்கினோம், வழக்கமாக அவற்றை நாங்கள் கோலாக மாற்றியிருப்போம் என்றே நினைத்தேன். போட்டியில் வெற்றி பெறாததால் நாங்கள் திருப்தியடையவில்லை என்பது எங்கள் முன்னேற்றத்தின் மற்றோர் அறிகுறி. மகிழ்ச்சியடையவும் பெருமைப்படவும் பல அம்சங்கள் உள்ளன,” என்றார் அவர்.
‘ஏ’ பிரிவில் சிங்கப்பூர், இந்தோனீசியாவுடன் ஒரு புள்ளி கூடுதலாகப் பெற்றுள்ளது.
அடுத்து சிங்கப்பூர், ஜாலான் புசார் விளையாட்டரங்கில் இம்மாதம் 7ஆம் தேதி இந்தோனீசியாவைச் சந்திக்கும். அந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் வெற்றிபெற்றால், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும்.

