பெர்த்: பின்தொடைத் தசைநார் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அணித்தலைவர் பேட் கம்மின்சும் காயம் காரணமாக விலகியிருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சு வரிசை பலவீனமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவ்வகையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
அவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை (நவம்பர் 12) சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் விளையாடியபோது 34 வயது ஹேசல்வுட்டிற்குப் பின்தொடைத் தசைநாரில் காயமேற்பட்டது. மருத்துவப் பரிசோதனையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, அவருக்குப் பதிலாக மைக்கல் நெசர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன், 31 வயது வேகப் பந்துவீச்சாளர் பிரண்டன் டாகட் அறிமுக வீரராக பெர்த் டெஸ்ட்டில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் காயத்திலிருந்து மீண்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த 2021-22 ஆஷஸ் தொடரில் 35 வயது மார்க் வுட் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்துரைத்துள்ளார்.
சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடர்வதும் அவரது கருத்துக்கு வலுசேர்க்கிறது.
கடைசியாக 2015ஆம் ஆண்டில்தான் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை, அதுவும் சொந்த மண்ணில்தான் கைப்பற்றியது. 2011ஆம் ஆண்டிற்குப்பின் அவ்வணி ஆஸ்திரேலியாவில் வென்றதே இல்லை. கடைசியாகச் சென்ற மும்முறையும் 5-0, 4-0, 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தோற்றுப்போனது.

