மெல்பர்ன்: இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஐந்து ஆட்டங்கள் கொண்ட‘ஆஷஸ்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலகப் புகழ்பெற்றது.
இவ்வாண்டு ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ‘ஆஷஸ்’ டெஸ்ட் தொடரை 3-0 என்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே கைப்பற்றிக் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
இந்நிலையில், மெல்பர்ன் நகரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நான்காவது டெஸ்ட் ஆட்டம் தொடங்கியது.
முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. முன்னணிப் பந்தடிப்பாளர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களில் வெளியேறினர்.
பந்துவீச்சாளரான மைக்கல் நீசர் அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார். சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்தின் ஜாஷ் டங் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து ஆஸ்திரேலியாவின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் 110 ஓட்டங்களுக்குச் சுருண்டது. நீசர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா 42 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
இரண்டாவது நாளிலும் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் பந்தடிப்பாளர்கள் திணறினர். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.
இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய டங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து ஆஸ்திரேலிய மண்ணில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் ஆட்டத்தை வென்றுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 18 ஆட்டங்களில் இங்கிலாந்து வெல்லத் தவறியது.

