செப்டம்பரில் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள்

1 mins read
2480803c-df17-4cfe-bced-bf6c8c429796
பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறும் என நம்பப்படுகிறது. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

துபாய்: வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) 2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இம்முறை டி20 போட்டிகளாக அவை நடத்தப்படும்.

ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, யுஏஇ, ஓமான், ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் கிண்ணத்திற்காக மோதவுள்ளன.

இரு பிரிவுகளாக அவை மோதும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆயினும், அவை இரண்டும் ஒரே பிரிவிலேயே இடம்பெறும் என நம்பப்படுகிறது.

கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டித் தொடராக ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் இறுதிப் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றியது.

முதலில் பந்தடித்த இலங்கை அணி 15.2 ஓவர்களிலேயே எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 50 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. அந்த எளிய இலக்கை ஏழாவது ஓவரிலேயே எட்டி, இந்திய அணி வாகை சூடியது.

குறிப்புச் சொற்கள்