துபாய்: ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற சூப்பர் நான்கு (Super Four) ஆட்டமொன்றில், அது பங்ளாதேஷை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை அணி வெளியேறியவும் ஆட்டம் வழிவகுத்தது. வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பங்ளாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும்.
முதலில் பந்தடித்த இந்தியா ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய அபிஷேக் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இம்முறையும் சிறப்பாக ஆடினார்கள். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு ஓவர்களில் 77 ஓட்டங்களைக் குவித்தனர்.
கில் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் அபாரமாக ஆடி 37 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்களை எடுத்தார்.
ஷிவம் துபேயும் அணித் தலைவர் சூர்யகுமார் யாதவும் ஓரிலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தனர். ஹார்திக் பாண்டியா நிலைமையைச் சரிசெய்தார். 38 ஓட்டங்கள் எடுத்து இந்தியா 168 ஓட்டங்களை எட்ட அவர் கைகொடுத்தார்.
பின்னர் ஆடிய பங்ளாதேஷ் தொடக்கத்திலிருந்தே சிக்கலை எதிர்நோக்கியது. டான்சிட் ஹசான் ஒரே ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சைஃப் ஹசான் சிறப்பாக ஆடி 69 ஓட்டங்களும் மூன்றாவதாகக் களமிறங்கிய பர்வேஸ் ஹொசைன் இமோன் 21 ஓட்டங்களும் எடுத்தனர். எஞ்சிய எவரும் ஈரிலக்கத்தை எட்டவில்லை.
குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாகப் பந்துவீசி 18 ஓட்டங்களை மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ராவும் வருண் சக்கரவர்த்தியும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
ஆட்ட நாயகனாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார் அபிஷேக்.