தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட்

வெற்றியைத் தொடர இந்திய அணி இலக்கு

2 mins read
b047654b-9428-4200-862e-1d48474bb031
ஓமான் வீரர் ஆமிர் கலீம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கக் கோரி நடுவரிடம் முறையிடும் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன். - படம்: ஏஎஃப்பி

துபாய்: பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் நடப்பு ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டாம் முறையாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடக்கும் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் பொருதவிருக்கின்றன.

அந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்கும்.

எட்டு அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்ற ஆசியக் கிண்ணத் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய நான்கு அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் மோதும்.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் இம்மாதம் 14ஆம் தேதி மோதின. அதில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அப்போட்டியின்போது பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க இந்திய அணியினர் மறுத்துவிட்டதால் சர்ச்சை வெடித்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அவ்வாறு நடந்துகொண்டதாக இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்தார்.

இந்திய டி20 கிரிக்கெட் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (இடது), ஓமான் அணித்தலைவர் ஜதிந்தர் சிங்.
இந்திய டி20 கிரிக்கெட் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (இடது), ஓமான் அணித்தலைவர் ஜதிந்தர் சிங். - படம்: ஏஎஃப்பி

அதனைத் தொடர்ந்து, தொடரின் இடையிலேயே வெளியேறப் போவதாக மிரட்டல் விடுத்த பாகிஸ்தான், பின்னர் அம்முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

இப்படி எதிரும் புதிருமான நிலையில், இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கும் அவமானத்திற்கும் பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் ஆகா.
பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் ஆகா. - படம்: ஏஎஃப்பி

ஆயினும், அணியின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. யுஏஇ அணிக்கெதிராகவும் அதன் பந்தடிப்பு மோசமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் சயிம் அயூப் தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் ஓட்டக் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணியைப் பொறுத்தமட்டில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) ஓமானுக்கு எதிரான ஆட்டத்தில் சற்று தடுமாறியது. அந்த ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ராவிற்கும் வருண் சக்கரவர்த்திக்கும் ஓய்வளிக்கப்பட்டது. அத்துடன், சூர்யகுமாரும் பந்தடிக்கக் களமிறங்காமல் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்தது வியப்பளித்தது.

ஓமானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ஓட்டங்களையும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 38 ஓட்டங்களையும் குவித்தனர்.

இலக்கை விரட்டிய ஓமான் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை மட்டும் எடுத்து, 21 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அவ்வணியின் ஆமிர் கலீமும் (64 ஓட்டங்கள்) ஹமாத் மிர்சாவும் (51 ஓட்டங்கள்) அரைசதம் விளாசினர்.

குறிப்புச் சொற்கள்