கோலாலம்பூர்: ஆசியா முழுவதும் உள்ள தேசிய அணிகளுக்கான போட்டித் தரங்களையும் வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்தும் முயற்சியில், ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பு (ஏஎஃப்சி) நாடுகளுக்கிடையிலான லீக் போட்டியைத் (நேஷன்ஸ் லீக்) தொடங்கப்போவதாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) அறிவித்தது.
கோலாலம்பூரைத் தளமாகக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவால் லீக் தொடங்கும் தேதி எதுவும் வழங்கப்படவில்லை. போட்டியை நடத்துவதற்கு தற்போதுள்ள ஃபிஃபா அனைத்துலக கால அட்டவணையைப் பயன்படுத்த விரும்புவதாக அது கூறியது.
“எங்கள் 47 உறுப்பு நாட்டுச் சங்கங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான எங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் ஏஎஃப்சி நேஷன்ஸ் லீக் ஒரு முக்கியப் படியைப் பிரதிபலிக்கிறது,” என்று ஏஎஃப்சியின் பொதுச் செயலாளர் வின்ட்சர் ஜான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“கட்டமைக்கப்பட்ட போட்டி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், தேசிய அணிகள் எதிர்கொள்ளும் தளவாட மற்றும் செலவு தொடர்பான சவால்களை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், உயர்தர போட்டிகளுக்கான நிலையான அணுகலை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றும் திரு ஜான் மேலும் கூறினார்.
ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பு, தற்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கிண்ணப் போட்டியை ஏற்பாடு செய்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்கும் அடுத்த இறுதிச் சுற்று 2027 ஜனவரியில் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது.
ஐரோப்பிய காற்பந்துக் கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பான யுயேஃபா, அதன் உறுப்பு நாட்டு அணிகள் விளையாடும் அர்த்தமுள்ள போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 2018ஆம் ஆண்டில் அதன் சொந்த நேஷன்ஸ் லீக் போட்டியைத் தொடங்கியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

