குளறுபடிகளுக்காக மன்னிப்பு கோரினார் தலைமை ஏற்பாட்டாளர்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026

குளறுபடிகளுக்காக மன்னிப்பு கோரினார் தலைமை ஏற்பாட்டாளர்

படம்: ராய்ட்டர்ஸ்

26 Sep 2026 - 4:38 pm

1 mins read

நகோயா: ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து, தங்குமிடக் குளறுபடிகளுக்காக அதன் தலைமை ஏற்பாட்டாளர் சத்தோஷி முராத்தே மன்னிப்பு கோரியுள்ளார்.

கடைசி நேரத்தில் விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் திரண்டதால், முறையான வசதிகளைச் செய்து தருவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடக்கத்தில் கணித்ததைவிடக் கூடுதலாக 2,000 பேர் வந்ததால் மொத்தப் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 17,000ஆக உயர்ந்தது.

இதனால் போக்குவரத்து, தங்குமிடச் சேவைகளில் தவறுகள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்ட திரு முராத்தே, காரணம் எதுவாயினும் சேவைக் குறைபாடுகளுக்காகத் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் சொன்னார்.

பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பேருந்து வராததால் பயிற்சி ரத்தானதாக மங்கோலியப் பெண்கள் கூடைப்பந்துப் பயிற்சியாளர் கார்சியா அல்வரேஸ் கவலை தெரிவித்தார். சொகுசுக் கப்பலில் தங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதாக பிலிப்பீன்ஸ் ஸ்குவாஷ் விளையாட்டாளர் இவோன் அலீசா தலிடா குறைகூறினார்.

இத்தகைய தவறுகளுக்கு ஏற்பாட்டுக் குழு பொறுப்பேற்றுக்கொள்வதாகத் தெரிவித்த திரு முராத்தே, தற்போது போக்குவரத்து, தங்குமிடச் சேவைகளில் பெரிதும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். போட்டிகளின் இரண்டாம் பாதியில் நிலைமை இன்னும் சீரடையும் என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்போக்குவரத்துமன்னிப்புஜப்பான்