நகோயா: ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட உலகச் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த விளையாட்டு விழா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைமை இயக்குநர் உசேன் அல் முசல்லாம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு அணிகள் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதிருப்தி வெளியிட்ட போதிலும், ஒட்டுமொத்த அடிப்படையில் போட்டி வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்ற இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பலவிதமான குளறுபடிகள் அரங்கேறின.
விளையாட்டு வீரர்கள் தவறான விளையாட்டு மைதானங்களுக்குப் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டது முதல், தென்கொரிய ஹாக்கி அணிக்குப் பதிலாக வடகொரியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது வரை பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
ஒலிம்பிக் போட்டிகளைவிட அதிகமாக, 17,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் பங்கேற்ற நிலையில், அங்குப் போதிய படுக்கை வசதிகள் இல்லை. மேலும், விமான நிலையத்தை வந்தடைந்த விளையாட்டு வீரர்கள் ஏறத்தாழ ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாகச் சில நாடுகள் குறை கூறின.
சில போட்டிகளின்போது ஆதரவாளர் இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், விளையாட்டு வீரர்கள் தங்களது மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக நீச்சல், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் உலகச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
நிறைவு விழாவுக்கு முன்னதாக, திரு உசேன் அல்-முசல்லாம் இதுகுறித்து பேசினார்.
“புள்ளிவிவரங்களே உண்மைகளை உணர்த்தும்,” என்று அவர் கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக ஆதரித்துப் பேசினார். விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்த சூழல் உருவாக்கித் தரப்பட்டதால் மட்டுமே இந்தச் சாதனைகள் சாத்தியமாயின என்று அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு வீரர்கள் சரிவர உறங்காவிட்டால், அவர்களுக்குச் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாவிட்டால் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்றும் தங்களது வெற்றிக்கான சான்றுகளை அனைவரும் முன் வைப்பதாகவும் அவர் கூறினார்.
செலவைக் குறைக்கும் பொருட்டு, இந்தப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களுக்கான தனி கிராமம் அமைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஹோட்டல்கள், தற்காலிக மரக் குடில்கள், சொகுசுக் கப்பல் ஆகியவற்றில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தத் தங்கும் வசதிகளின் தரம் குறித்தும் குறிப்பாக மரக் குடில்களில் படுக்கைகள் மிகச் சிறியதாக இருந்ததாகவும் சில அணிகள் புகார் அளித்தன. இருப்பினும், தங்கும் வசதிகள் வீரர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும் இது எதிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் திரு அல் முசல்லாம் கூறினார். நகோயா நகரில் எவ்வித நிதிச் சுமையோ, தேவையற்ற ஆடம்பரப் பராமரிப்புச் செலவுகளோ இன்றிப் போட்டிகள் நிறைவடைந்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
