நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை கான் சிங் ஹுவீ தனது இரண்டாவது பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
செப்டம்பர் 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றில் அவர் இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் பந்தயத் தூரத்தை ஹுவீ 4 நிமிடம் 6.81 நொடிகளில் முடித்து அசத்தினார்.
சீன வீராங்கனை லீ பிங்ஜியே 4 நிமிடம் 2.71 நொடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
அதே வேளையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இச்சிக்கா காஜிமோட்டோ 4 நிமிடம் 7.45 நொடிகளில் மூன்றாமிடத்தில் வந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
23 வயதான ஹுவீ, இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற பெண்களுக்கான 1,500 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் இறுதிச் சுற்றிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
