அதிவேக அரைசதம், அதிவேக சதம், அதிக ஓட்டம்!

2 mins read
அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்த அணி
28fee34a-42f5-471e-9d4f-1b8322992198
ஒன்பது பந்துகளில் அரைசதம் கடந்த நேப்பாளத்தின் தீபேந்திர சிங். - படம்: டுவிட்டர்

ஹாங்ஜோ: அனைத்துலக டி20 கிரிக்கெட் விளையாட்டில் ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தகர்த்து, வரலாறு படைத்துள்ளது நேப்பாள அணி.

அதிவேக அரைசதம், அதிவேக சதம், அதிக ஓட்டம், அதிக சிக்சர், அதிக ஓட்ட வித்தியாசம் - இவைதான் அச்சாதனைகள்.

சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், புதன்கிழமை மங்கோலியாவிற்கு எதிரான போட்டியில் நேப்பாள அணி இந்தச் சாதனைகளை நிகழ்த்தியது.

முதலில் பந்தடித்த நேப்பாள அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களைக் குவித்தது. இதன்மூலம், அனைத்துலக டி20 வரலாற்றில் 300 ஓட்டங்களுக்குமேல் குவித்த முதல் அணி என்ற பெருமையை அது பெற்றது.

அவ்வணியின் 19 வயது குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் விளாசினார். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், இந்தியாவின் ரோகித் சர்மா இருவரும் 35 பந்துகளில் சதமடித்திருந்ததே முன்னைய சாதனை.

மூன்றாவது வீரராகக் களமிறங்கிய மல்லா 50 பந்துகளில் எட்டு பவுண்டரி, 12 சிக்சர் உட்பட 137 ஓட்டங்களை விளாசி, இறுதிவரை களத்திலிருந்தார்.

ஐந்தாவது வீரராகக் களம் கண்ட தீபேந்திர சிங் ஒன்பது பந்துகளில் அரைசதம் விளாசி, புதிய சாதனை நிகழ்த்தினார். அவர் பத்துப் பந்துகளில் எட்டு சிக்சர் உட்பட 52 ஓட்டங்களை விளாசி, ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக, 2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதமடித்திருந்தார்.

மொத்தம் 26 சிக்சர்களைப் பறக்கவிட்டதன் மூலம் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த அணிப் பட்டியலிலும் நேப்பாளம் முதலிடத்தைப் பிடித்தது.

இரண்டாவதாகப் பந்தடித்த மங்கோலியா 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ஓட்டங்களை மட்டும் எடுத்து, 273 ஓட்ட வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இதன்மூலம் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிகண்ட அணி என்ற பெருமையையும் நேப்பாளம் தேடிக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்