தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை அணிக்காக நீண்டகாலம் விளையாட விருப்பம்: அஸ்வின்

2 mins read
ஓய்வை அறிவித்தபின் சென்னை திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு
ca5ad8d5-3e9b-4e17-af90-c4d10743ffe1
அனைத்துலக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற 24 மணி நேரத்திற்குள் சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பினார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். - படம்: ஏஎஃப்பி

சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தம்மால் முடிந்தவரை நீண்டகாலம் விளையாட விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடன் சென்ற 38 வயது அஸ்வின், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளன்று (டிசம்பர் 18 புதன்கிழமை) அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

அவரது இந்தத் திடீர் முடிவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனையடுத்து, 24 மணி நேரத்திற்குள்ளாகத் தமது ஊரான சென்னையைச் சென்றடைந்தார் அஸ்வின். அங்கு அவருக்குப் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ஓய்வு முடிவால் தமக்கு வருத்தமேதும் இல்லை என்றார்.

முன்பெல்லாம் தாம் வீழ்த்திய விக்கெட்டுகள், எடுத்த ஓட்டங்கள் எல்லாம் இரவில் நினைவிற்கு வரும் என்றும் கடந்த ஈராண்டுகளாக அத்தகைய நினைவுகள் வரவில்லை என்றும் அவர் சொன்னார்.

அவரது அடுத்த திட்டங்கள் குறித்து கேட்டபோது, “இப்போதைக்குச் சும்மா இருக்க வேண்டியதுதான். உடனடித் திட்டங்கள் ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, சும்மா இருப்பது கடினந்தான்,” என்று அவர் பதிலளித்தார்.

மேலும், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளேன். என்னால் முடிந்தவரை நீண்டகாலத்திற்குச் சென்னை அணிக்காக விளையாட விரும்புகிறேன்,” என்றும் அஸ்வின் சொன்னார்.

இந்திய கிரிக்கெட் வீரராகத்தான் தமது வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளது என்றும் கிரிக்கெட் விளையாட்டாளராக நான் இன்னும் ஓய்வுபெற்றுவிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்