பாரிஸ்: ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் (ஆண்கள் பிரிவில்) முதல்முறையாக ஆப்பிரிக்க வீரர் தங்கம் வென்றுள்ளார்.
போட்ஸ்வானாவைச் சேர்ந்த 21 வயது லெட்சிலே டெபோகோ பந்தயத்தை 19.46 நொடிகளில் முடித்து தங்கம் வென்றார்.
இதுவே ஒலிம்பிக் போட்டியில் போட்ஸ்வானா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தைக் குறைந்த நேரத்தில் ஓடி முடித்தோர் பட்டியலில் டெபோகோ ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் கென்னி பெட்னரேக், நோவா லைல்ஸ் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
நோவா லைல்ஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றவர்.
இதனிடையே, நாட்டிற்கு முதன்முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைத்துள்ள மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், போட்ஸ்வானா அதிபர் நாடு முழுதும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளார்.