பாகிஸ்தானின் தங்க மகனுக்கு அமோக வரவேற்பு

பாகிஸ்தானின் தங்க மகனுக்கு அமோக வரவேற்பு

1 mins read
b5793d92-44b2-4231-a2b7-4be1a3274ab1
ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் - படம்: ஏஎஃப்பி

லாகூர்: பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார்.

இதுவே இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றுள்ள முதல் பதக்கம்.

நடப்பு வெற்றியாளரான இந்தியாவின் நீரஜ் சோப்ராவை 27 வயது நதீம் தோற்கடித்தார்.

நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

பரம வைரியான இந்தியாவைத் தோற்கடித்து தங்கம் வென்றது மட்டுமல்லாது, ஈட்டியை 92.97 மீட்டர் தூரம் வீசி புதிய ஒலிம்பிக் சாதனையை நதீம் படைத்துள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி சொந்த நாடு திரும்பிய நதீமுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

நதீமை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் லாகூர் நகரில் திரண்டனர்.

“அர்ஷத் நதீம் வாழ்க! பாகிஸ்தான் வாழ்க!” என அவர்கள் முழக்கமிட்டனர்.

நதீமை அவரது குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நதீமுக்கு அவரது தந்தை மாலை அணிவித்தார்.

நதீமுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நதீமுக்கு பாகிஸ்தானின் இரண்டாவது ஆக உயரிய சிவிலியன் விருதான ஹிலால் -இ -இம்தியாஸ் வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அசிஃப் அலி ஸர்தாரி ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று அறிவித்தார்.

“இறைவனுக்கும், எனது பெற்றோருக்கும், பாகிஸ்தானுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தம்மை வரவேற்க திரண்டோரிடம் நதீம் மகிழ்ச்சிப் பொங்க கூறினார்.

இந்த வெற்றிக்குத் தமது கடுமையான உழைப்பும் தமது பயிற்றுவிப்பாளர் சல்மான் பட் அளித்த பயிற்சியும் காரணம் என்று நதீம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்