மெல்பர்ன்: ஆஸ்திரேலிய அணியின் முன்னணிப் பந்தடிப்பாளரான ஸ்டீவ் ஸ்மித், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார் 35 வயதான ஸ்மித்.
இவ்வாண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடந்த டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் சேர்க்கப்படவில்லை.
ஆயினும், டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகைப் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவதில் ஸ்மித் உறுதியாக இருக்கிறார்.
“கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் திட்டமில்லை. இப்போது நான் மகிழ்ச்சியோடு விளையாடி வருகிறேன். அடுத்த பிக் பேஷ் லீக்கில் சில ஆட்டங்கள் விளையாட முடியும் என நினைக்கிறேன். அதன்பின் சிந்திக்கலாம். கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நான் வீணடிக்க விரும்பவில்லை,” என்று ஸ்மித் கூறியுள்ளார்.
வரும் நவம்பரில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.
டேவிட் வார்னர் ஓய்வுபெற்றுவிட்டதால் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.
இந்திய அணிக்கெதிரான போட்டிகளிலும் அந்நிலையிலேயே விளையாடுவாரா எனக் கேட்டதற்கு, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் நான்காம் வீரராகக் களமிறங்கவே சக அணியினர் விரும்புகின்றனர் என்றும் ஸ்மித் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனாலும், எந்த நிலையிலும் களமிறங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

