தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்

1 mins read
f064816d-0ba2-4efd-bc6c-e27341b32cee
மார்னஸ் லபுஷேன். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: அண்மைய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதை அடுத்து, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் லபுஷேன் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆயினும், அண்மையில் தென்னாப்பிரிக்க, இந்திய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஓட்டம் குவிக்க, அவரைத் தேர்வுசெய்யும் நிலைக்கு ஆஸ்திரேலியத் தேர்வுக்குழு தள்ளப்பட்டது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் மாற்றம் செய்ய செப்டம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமையே கடைசி நாள். அதன்பின் மாற்றம் செய்வதாக இருந்தால் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்க்கும் இடம் கிடைத்துள்ளது. காயமடைந்துள்ள இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் ஏகாருக்குப் பதிலாக ஹெட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆயினும், தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது கையை உடைத்துக்கொண்டதால் ஆஸ்திரேலிய அணியின் முதல் சில ஆட்டங்களில் ஹெட் விளையாட முடியாமல் போகலாம் எனக் கூறப்படுகிறது.

ஐந்துமுறை உலகக் கிண்ண வெற்றியாளரான ஆஸ்திரேலியா, முதலாவதாக அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவுடன் பொருதவுள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (அணித்தலைவர்), ஷான் அபட், அலெக்ஸ் கேரி, கேமரன் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மாட்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

குறிப்புச் சொற்கள்