மும்பை: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண வரலாற்றில், ஒரே போட்டியிலேயே பல சாதனைகளை முறியடித்து, வரலாற்றைத் திருத்தி எழுதியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தில், மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ஓட்டங்களைக் குவித்து, தமது அணியை வெற்றிபெறச் செய்தார்.
இந்தப் போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகளில் சில:
* மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் எடுத்த 201 ஓட்டங்களே அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இலக்கை விரட்டியபோது ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள். முன்னதாக, 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஃபகர் ஸமான் 193 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
* ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச் சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மேக்ஸ்வெல். முன்னதாக, 2011ல் பங்ளாதேஷுக்கு எதிரான போட்டியில் ஷேன் வாட்சன் 185 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
* மேக்ஸ்வெல்லின் 201 ஓட்டங்களே அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆறாம் நிலை வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டம். 1983 உலகக் கிண்ணத் தொடரில் அப்போதைய இந்திய அணித்தலைவர் கபில்தேவ் ஸிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 175 ஓட்டங்களை விளாசியதே முன்னைய சாதனை.
* தொடக்க ஆட்டக்காரர்கள் தவிர்த்து, மற்ற நிலை வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுதான். முன்னதாக, ஸிம்பாப்வேயின் சார்ல்ஸ் கொவென்ட்ரி 2009ஆம் ஆண்டு பங்ளாதேஷுக்கு எதிராக 194 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
* ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக இரண்டாவது இரட்டைச் சதம். சென்ற ஆண்டு பங்ளாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் இஷான் கிஷன் 126 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
* மார்ட்டின் கப்டில் (237*, நியூசிலாந்து), கிறிஸ் கெய்ல் (215, வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோருக்கு அடுத்து, உலகக் கிண்ணப் போட்டிகளில் இரட்டைச் சதமடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மேக்ஸ்வெல்.
* எட்டாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணை 202 ஓட்டங்களைச் சேர்த்து புதிய உலக சாதனை படைத்தது. தென்னாப்பிரிக்காவின் ஜஸ்டின் கெம்ப் - ஆண்ட்ரூ ஹால் இணை எட்டாவது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களைச் சேர்த்திருந்ததே முன்னைய சாதனை.
* 292 ஓட்டங்கள் - உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எட்டிய அதிகபட்ச இலக்கு.