பெங்களூரு: கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் அடித்த சிக்சரால், திடலின் ஓரத்தில் விளம்பரத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த ஆதரவாளரின் கார் கண்ணாடி உடைந்தது.
இச்சம்பவம் பெங்களூரில் திங்கட்கிழமை (மார்ச் 3) இடம்பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஐபிஎல் டி20 போட்டியின்போது நிகழ்ந்தது.
சிக்சர் அடித்து, காரின் பின்னிருக்கைக் கண்ணாடியைப் பதம்பார்த்தவர் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெரி.
கார் கண்ணாடி சுக்குநூறாக உடைந்ததைக் கண்ட பெரி, தலையில் கைவைத்தபடி தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர், “எனக்குக் காப்புறுதி இருக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை. எனக்குச் சற்றுக் கவலையாக இருக்கிறது,” என்று வேடிக்கையாகச் சொன்னார் 33 வயதான பெரி.
பெரி 37 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாச, பெங்களூரு அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைக் குவித்தது. இலக்கை விரட்டிய உ.பி. வாரியர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை எடுத்து, 23 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது.