மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருதின் நான்காம் சுற்றுக்குள் எளிதாக நுழைந்தார், உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்.
மூன்றாம் சுற்றில் அல்கராஸ் 6-1, 6-1, 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, அவரை எதிர்த்தாடிய சீன வீரர் ஷாங் ஜுன்செங் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகினார்.
இருமுறை கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரான அல்கராஸ், 18 வயது ஷாங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.
மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகளில் விளையாடும் அல்கராஸ், நான்காம் சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதன்முறை.
“ஆஸ்திரேலியப் பொது விருதின் இரண்டாம் வாரத்தில் நான் விளையாடியது இதுவே முதன்முறை என்பதால் மிகவும் சிறப்பாக உணர்கிறேன்,” என்றார் அல்கராஸ்.
“கடந்த 2022ஆம் ஆண்டில் விளையாடியதைக் காட்டிலும் இம்முறை மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். அதைச் செய்துகாட்டிவிட்டேன். இனி மேலும் சிறப்பாக விளையாடி, அடுத்தடுத்த சுற்றுகளில் நுழைவதே இலக்கு,” என்று அவர் சொன்னார்.
அல்கராஸ் அடுத்த சுற்றில் செர்பியாவின் மியோமிர் கெக்மானொவிச்சுடன் மோதவிருக்கிறார்.
‘அற்புதம் நிகழ்ந்தால்தான் அவரைத் தடுக்க முடியும்’
அலக்ராசைப் போலவே, உலகின் முதல்நிலை வீரரும் பத்து முறை ஆஸ்திரேலியப் பொது விருதை வென்றவருமான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் நான்காம் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாம் சுற்றில் அவர் அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரியை 6-3, 6-3, 7-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தால்தான் ஜோக்கோவிச்சின் வெற்றிநடைக்கு முட்டுக்கட்டை போட முடியும் என்று தெரிவித்துள்ளார், ஆஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் ராட் லேவர்.
“இறுதிச் சுற்றுக்கு அவர் ஆயத்தமாகி வருவதுபோலத் தெரிகிறது. அவரது மனம் முழுக்க டென்னிஸ்தான் இருக்கிறது. தான் என்ன செய்ய வேண்டும் என்பது அவர் கண்முன்னே தெரிகிறது. அதை நிகழ்த்தியும் காட்டுகிறார். அதனால், எவரேனும் ஒருவர் ஏதேனும் அற்புதத்தை நிகழ்த்தினால்தான் அவரைத் தடுத்து நிறுத்த முடியும்,” என்றார் லேவர்.
நான்காம் சுற்றில் ஜோக்கோவிச், பிரான்சின் ஏட்ரியன் மேன்னரினோவை எதிர்த்தாடவுள்ளார்.

