சென்னை: ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியின் எட்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பந்தடித்த பெங்களூர் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 196 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சென்னை தோற்றது. இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு சென்னையைப் பெங்களூர் அணி சேப்பாக்கத்தில் வீழ்த்தியது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வாகை சூடியது பெங்களூரு.
தற்காத்துப் பேசிய பிளமிங்
சென்னையின் தோல்வி குறித்து அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தற்காத்துப் பேசியுள்ளார்.
“சேப்பாக்கத்தில் விளையாடுவதால் சென்னை அணிக்கு எந்த அனுகூலமும் இல்லை என்பதைக் கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லி வருகிறோம். நாங்கள் தெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.
சென்னையிடம் தேவையான அதிரடி பலம் உள்ளது. முதல் பந்தே அடித்து ஆட வேண்டும் என்று நினைப்பது தவறு. முடிவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்,” என்று பிளமிங் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை அணி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.