நியூயார்க்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டம் சனிக்கிழமை காலை டாலஸ் நகரில் நடந்தது. அதில் இலங்கையும் பங்ளாதேஷ் அணியும் மோதின.
தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் மோசமாக தோல்வியைத் தழுவியதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை களமிறங்கியது.
பூவா தலையாவில் வெற்றிபெற்ற பங்ளாதேஷ் முதலில் பந்துவீசியது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இலங்கை பந்தடிப்பாளர்கள் 9வது ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 70 ஓட்டங்களை கடந்து நல்ல நிலையில் இருந்தனர்.
ஆனால் ரிஷாத் ஹோசைனின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதில் 124 ஓட்டங்கள் மட்டுமே இலங்கை எடுத்தது. பத்தும் நிசான்கா 47 ஓட்டங்கள் குவித்தார்.
சிறப்பாக பந்துவீசிய ஹோசைன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவருக்கு பக்கபலமாக இருந்த முஸ்தபீசுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சுலபமான இலக்கை விரட்டிய பங்ளாதேஷ் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் லிட்டன் தாஸ் பொறுமையாக விளையாடி 36 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்கு உதவியாக தோவித் செயல்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதிரடியாக ஆடிய தோவித் 20 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தார். இனி பங்ளாதேஷ் எளிதாக வெற்றிபெற்று விடும் என்று இருந்த நிலையில் நுவான் துசாரா அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பினார்.
இருப்பினும் முகம்துல்லா ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துசென்றார். 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து பங்ளாதேஷ் 125 ஓட்டங்கள் எடுத்தது.
நுவான் துசாரா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணிக்கு ஆறுதல் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பங்ளாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது. ஆனால் மறுபக்கம் இலங்கையின் நிலைமை மோசமாக உள்ளது. அது அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது சற்று கடினமான ஒன்றாக மாறியுள்ளது.
சிறப்பாக விளையாடிய ரிஷாத் ஹோசைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இனி ஜூன் 10ஆம் தேதி பங்ளாதேஷ் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது. இலங்கை ஜூன் 12ஆம் தேதி நேப்பாளைச் சந்திக்கும்.

