மட்ரிட்: முன்னணி ஸ்பானியக் காற்பந்துக் குழுவான பார்சிலோனா, நிர்வாகி ஸாவி ஹெர்னாண்டசை அதிரடியாக நீக்கியுள்ளது.
அடுத்த பருவத்திலும் ஸாவியே நிர்வாகியாகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்ட நான்கு வாரங்களிலேயே நிலைமை தலைகீழாகிவிட்டது.
“2024-25 பருவத்தில் பார்சிலோனா குழு நிர்வாகியாக ஸாவி தொடரமாட்டார் என்பதை குழுத் தலைவர் ஜோவன் லப்போர்ட்டா தெரிவித்துள்ளார்,” என்று பார்சிலோனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
“பயிற்றுவிப்பாளராகவும், ஆட்டக்காரராகவும், அணித்தலைவராகவும் ஸாவி ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்ள பார்சிலோனா விரும்புகிறது,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு பார்சிலோனா நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் 44 வயதான ஸாவி.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடைபெறவுள்ள செவிய்யா குழுவிற்கு எதிரான ஸ்பானிய லீக் ஆட்டமே பார்சிலோனா நிர்வாகியாக ஸாவிக்குக் கடைசி ஆட்டம்.
இவரது நிர்வாகத்தின்கீழ் பார்சிலோனா 141 ஆட்டங்களில் விளையாடி 89ல் வென்றுள்ளது. அக்குழு சார்பாக அவர் 17 ஆண்டுகாலமாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இப்பருவத்துடன் பார்சிலோனாவைவிட்டு வெளியேறுவதாகக் கடந்த ஜனவரி மாதம் ஸாவி அறிவித்திருந்தார். ஆயினும், பார்சிலோனா நிர்வாகம் அவரிடம் தொடர்ந்து பேசி, அவரே அடுத்த பருவத்திலும் நிர்வாகியாகத் தொடரும்படி இணங்க வைத்தது. ஆனால், இப்போது நிர்வாகமே அவரை வெளியேற்றிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஜெர்மானிய முன்னணிக் காற்பந்துக் குழுவான பயர்ன் மியூனிக்கின் முன்னாள் நிர்வாகியும் ஜெர்மானிய தேசியக் குழுவின் முன்னாள் பயிற்றுநருமான ஹன்சி ஃபிளிக், 59, பார்சிலோனாவின் அடுத்த நிர்வாகியாகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.