தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அணிக்குப் புதிய பயிற்றுநர்: முன்னாள் வீரரை அணுகிய பிசிசிஐ

1 mins read
d8d8eacc-8c96-4c48-bbfb-d85484ec2ed3
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மாவுடன் (வலது) கௌதம் காம்பீர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளார் அவ்வணியின் முன்னாள் தலைவரான ராகுல் டிராவிட்.

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்றுநர் பொறுப்பை ஏற்கும்படி அவ்வணியின் முன்னாள் தொடக்கப் பந்தடிப்பாளர் கௌதம் காம்பீரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அணுகியுள்ளதாக ‘இஎஸ்பிஎன்கிரிக்இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்பில் நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் நிறைவடைந்தபின் காம்பீருடன் பிசிசிஐ பேசவுள்ளதாக அறியப்படுகிறது என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

தற்போது, ஐபிஎல் போட்டிகளில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதியுரைஞராக காம்பீர் செயல்பட்டு வருகிறார். புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கோல்கத்தா, முதல் அணியாக ‘பிளே ஆஃப்’ சுற்றுக்குள் நுழைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் காம்பீர். அப்போது, இலங்கை அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் அவர் 97 ஓட்டங்களை விளாசியது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை (மே 13) இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தார். புதிய பயிற்றுநரின் பதவிக்காலம் இவ்வாண்டு ஜூலை 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

இம்மாதம் 27ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்