புதுடெல்லி: கார் விபத்தில் சிக்கி, கிட்டத்தட்ட 14 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த இந்திய வீரர் ரிஷப் பன்ட் முழுமையாகத் தேறிவிட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) பக்கம் வழியாக அறிவித்துள்ளது.
கடந்த 2022 டிசம்பர் 30ஆம் தேதி நிகழ்ந்த மோசமான கார் விபத்தில் 26 வயது பன்ட் கடுமையாகக் காயமடைந்தார்.
இந்நிலையில், இம்மாதப் பிற்பகுதியில் தொடங்கவுள்ள இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டிகளில் பன்ட், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் காப்பாளராகவும் பந்தடிப்பாளராகவும் செயல்படுவார்.
மொகாலியில் மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்தாட இருக்கிறது.
இதற்கிடையே, காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் முகம்மது ஷமி, பிரசித் கிருஷ்ணா இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.