மும்பை: இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் அணியான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோல்கத்தா அணியிலிருந்து பங்ளாதேஷ் வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானை நீக்க அது உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் வேகப் பந்துவீச்சாளரான ரஹ்மானை கோல்கத்தா அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
ஆனால், அதன்பின்னர் பங்ளாதேஷில் வன்முறை வெடித்தது. இந்தியாவிலும் சில எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் இந்தியாவுக்கும் பங்ளாதேஷுக்கும் இடையிலான உறவில் விரிசலும் ஏற்பட்டது.
ரஹ்மான் நீக்கம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளார்.
“அண்மைய நிலவரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோல்கத்தா அணிக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ரஹ்மான் இல்லாதது கோல்கத்தா அணிக்குச் சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ரஹ்மான் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். அவர் திடீரென வேகத்தை மாற்றி வீசும் திறமையைப் பெற்றவர், அது பந்தடிப்பாளர்களைத் திணறச் செய்யும்.
கேள்விக்குறியில் பங்ளாதேஷ் சுற்றுப்பயணம்
இந்நிலையில், இந்திய அணி பங்ளாதேஷில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரிலும் மூன்று போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாகப் பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் இப்போது அந்தத் தொடர் நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
செப்டம்பர் 1, 3, 6 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 9, 12, 13 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய அணி ஆகஸ்ட் 28ஆம் தேதி பங்ளாதேஷ் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ பங்ளாதேஷ் சுற்றுப்பயணம் குறித்து விரைவில் தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

