நியூயார்க்: ‘பிக் ஜார்ஜ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். அவருக்கு 76 வயது.
ஃபோர்மேன் வெள்ளிக்கிழமை இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகம் வழி தகவல் வெளியிட்டனர்.
ஃபோர்மேன் 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்தார். முதலில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட அவர் பின்னர் குத்துச் சண்டையில் ஈடுபட்டு வாழ்க்கையை மாற்றினார்.
1968ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் ஃபோர்மேன். அவர் இரண்டு முறை ‘ஹெவி வெயிட்’ (heavyweight) பட்டத்தை வென்று சாதித்தவர்.
அவரது முதல் பட்டத்திற்கு இரண்டாம் பட்டத்திற்கும் 21 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. 45வது வயதில் ‘ஹெவி வெயிட்’ பட்டத்தை வென்று ஆக வயதான வெற்றியாளர் என வரலாற்றைப் படைத்தார் ஃபோர்மேன்.
தனது முதல் ‘ஹெவி வெயிட்’ பட்டத்தை 1974ஆம் ஆண்டு முகம்மது அலியிடம் இழந்தார் ஃபோர்மேன். அந்த ஆட்டம் குத்துச் சண்டை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தனது குத்துச் சண்டைப் பயணத்தில் 76 வெற்றிகளைப் பெற்றார் ஜார்ஜ் ஃபோர்மேன். அதில் 68 வெற்றிகள் ‘நாக்அவுட்’ முறையில் பெற்ற வெற்றிகள். முகம்மது அலியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வெற்றிகளைக் குவித்தவர் ஃபோர்மேன்.
தொடர்ந்து 37 போட்டிகளில் வெற்றிபெற்று அசத்திய ஃபோர்மேன், ஐந்து முறை மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
முதலில் ஃபோர்மேன் 1977ஆம் ஆண்டு குத்துச் சண்டையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் பாதிரியாராகச் சேவையாற்றினார்.
சமூக சேவை செய்யப் போதுமான நிதி இல்லாத காரணத்தால் ஃபோர்மேன் 1987ஆம் ஆண்டு மீண்டும் குத்துச் சண்டையில் களமிறங்கினார்.
ஃபோர்மேன் 1997ஆம் ஆண்டு குத்துச் சண்டையிலிருந்து விடைபெற்றார். இருப்பினும் அதன் பிறகு அவர் உணவகம் தொடங்கினார். அதில் பல மில்லியன் டாலர் சம்பாதித்தார்.
ஃபோர்மேனின் மறைவுக்கு மைக் டைசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

