உலகக் கிண்ணம்: அரையிறுதிச் சுற்றுக்கு குறிவைக்கும் பிரேசில், அர்ஜெண்டினா

2 mins read
24521f8a-a30f-44f9-be7d-19a3c01ad2bc
படம்: இபிஏ -

ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றியாளரான பிரேசில் காற்பந்து அணி, 2022 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முதலாவதாக தகுதிபெற முனைப்புடன் உள்ளது.

காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் பிரேசில், குரோவேஷியா அணிகள் பொருதுகின்றன.

இம்முறை போட்டியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான பிரேசிலுக்கு, 2018 இறுதியாட்டம் வரை சென்ற குரோவேஷியா கடுமையான போட்டியைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

இன்று பின்னிரவு 3 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா நெதர்லாந்துடன் மோதுகிறது.

இவ்விரு ஆட்டங்களில் தென்னமெரிக்க அணிகளான பிரேசிலும் அர்ஜெண்டினாவும் வென்றால், அரையிறுதிச் சுற்றில் இவை பொருதும் நிலை ஏற்படும்.

1990க்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில்லை.

இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலின் தொடக்க ஆட்டத்தில் கணுக்கால் காயத்தால் அவதியுற்ற நட்சத்திர வீரர் நெய்மார், அணிக்குத் திரும்பியுள்ளார்.

"பிரேசில் அணியுடன் சேர்ந்து வெல்ல என்னால் ஆன அனைத்தையும் கொடுப்பேன். கிண்ணத்தை வெல்வதே எங்கள் இலக்கும் கனவும்கூட. இலக்கை எட்டுவதில் நாங்கள் ஒருபடி நெருங்கிவிட்டோம்," என்றார் அவர்.

அர்ஜெண்டின நட்சத்திரமான லயனல் மெஸ்ஸி, தம் அணியுடன் சேர்ந்து உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர துடிப்புடன் உள்ளார்.

2014 உலகக் கிண்ணப் போட்டியில் இறுதியாட்டம் வரை சென்ற அர்ஜெண்டினா, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவியது.