குவிட்டோ: மகளிருக்கான கோப்பா கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குப் பிரேசில் தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் உருகுவாய் குழுவைப் பிரேசிலிய மகளிர் அணி 5-1 எனும் கோல் கணக்கில் புரட்டி எடுத்தது.
நடப்பு வெற்றியாளரான பிரேசில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொலம்பியாவுடன் மோதும்.
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் பிரேசிலிய மகளிர் காற்பந்துக் குழு தகுதி பெற்றுள்ளது.
“எங்கள் அணி மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பயிற்றுவிப்பாளருடன் ஒன்றிணைந்து செயல்பட்டோம். கடுமையாகப் பயிற்சி செய்தோம். அதன் விளைவாக வெற்றி பெற்றுள்ளோம். முதல்முறையாக இறுதி ஆட்டத்தில் களமிறங்க இருக்கிறோம். இறுதி ஆட்டத்துக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன். கொலம்பியா சவால்மிக்க எதிரணியாகும். ஆனால் கிண்ணத்தை ஏந்த மிகக் கடுமையாக பயிற்சி செய்து வருகிறோம்,” என்று அரையிறுதி ஆட்டத்தில் பிரேசிலுக்காக இரண்டு கோல்களைப் போட்ட 24 வயது அமாண்டா குட்டேரெஸ் தெரிவித்தார்.