பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் (டிசம்பர் 14) ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
தொடரில் ஆதிக்கத்தைத் தொடர பிரிஸ்பன் நகரில் நடக்கும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்று என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் தொடங்கியது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என்று கவனமாக ஆஸ்திரேலிய பந்தடிப்பாளர்கள் உறுதியுடன் விளையாடினர்.
இந்நிலையில், ஆட்டத்தின் 6ஆவது ஓவரில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்தபோது 13ஆவது ஓவரில் மீண்டும் மழை பெய்தது.
மழை ஓய்ந்தவுடன் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை விடாமல் தொடர்ந்து பெய்தது. இதனால் ஆடுகளத்தின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதனால், முதல் நாள் ஆட்டத்தைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. சிறிது நேரம் ஆடுகளத்தைச் சோதித்த ஆட்ட நடுவர்கள் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் விருதுத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றது.