புதுடெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அணியின் துணைத் தலைவராக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் பங்ளாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறது.
அந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆட உள்ளது. இந்தத் தொடரும் இந்தியாவிலேயே நடக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி - பெங்களூரு - அக்டோபர் 16-20; 2வது டெஸ்ட் போட்டி - புனே - அக்டோபர் 24-28; 3வது டெஸ்ட் போட்டி - மும்பை - நவம்பர் 1-5 என அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கான நியூசிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) இந்திய அணியில் இடம்பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
ரோஹித் சர்மா (அணித் தலைவர்), ஜஸ்பிரித் பும்ரா (துணைத் தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பங்ளாதேஷ் டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் யாஷ் தயாளைத் தவிர்த்து இதர வீரர்கள் அனைவரும் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.
அணியின் துணைத்தலைவராக ஜஸ்பிரித் பும்ரா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களின்போது பும்ரா டெஸ்ட் அணியின் துணைத் தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் அந்தப் பொறுப்பில் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக பும்ரா நியமிக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் இந்திய அணியின் தலைவருக்கான பட்டியலில் பும்ரா இடம்பிடித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது ரோஹித் சர்மா சில போட்டிகளில் விளையாடாத பட்சத்தில், பும்ரா அணித் தலைவராகச் செயல்படுவார் எனத் தெரியவந்துள்ளது.