தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

70,000 ‘கோஹ்லி’: பிரம்மாண்ட ஏற்பாடு

1 mins read
அரங்கில் எங்கு திரும்பினாலும் ‘கோஹ்லி’ முகம்!
65ae1222-e801-49ed-9b7c-085fcc61dc00
விராத் கோஹ்லியின் 35வது பிறந்தநாளைப் பிரம்மாண்டமாக கொண்டாட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: இந்தியாவில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் நிலையில், இம்மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோல்கத்தா ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடக்கவுள்ள போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் பொருதவுள்ளன.

அன்றுதான் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராத் கோஹ்லியின் 35வது பிறந்தநாள்.

இதனையடுத்து, அவரது பிறந்தநாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாட மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

ஈடன் கார்டன் அரங்கில் 66,000 பேர் அமர்ந்து பார்க்கலாம். இந்நிலையில், நவம்பர் 5ஆம் தேதியன்று பார்வையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 70,000 பேருக்கு கோஹ்லியின் படம் பொறித்த முகமூடிகளை வழங்க வங்க கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியின் சகோதரர் சிநேகாஷிஷ் கங்குலிதான் அச்சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

“கோஹ்லி களமிறங்கும்பொழுது அரங்கிலிருக்கும் அனைவரும் கோஹ்லி படத்துடன் கூடிய முகமூடியை அணிந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம்,” என்றார் சிநேகாஷிஷ்.

அத்துடன், அன்றைய நாளில் அந்த அரங்கில் கண்கவர் வாண வேடிக்கை இடம்பெறவுள்ளது. போட்டி தொடங்குமுன் கோஹ்லி பிறந்தநாள் ‘கேக்’ வெட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயினும், இத்திட்டங்கள் எல்லாம் இன்னும் உறுதியாகவில்லை என்றும் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் (ஐசிசி) அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்