தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது கனடா

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: இரண்டாம் சுற்று

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது கனடா

1 mins read
a87f253a-a91e-4ff6-a129-410335d7f442
கனடாவின் வெற்றிகோலைப் புகுத்தியதைக் கொண்டாடினார் ஸ்டெஃபன் யுஸ்டாக்கியோ (இடமிருந்து இரண்டாமவர்). - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இங்கிள்வுட்: கனடா, உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றில் முதன்முறையாக 16 அணிகள் மோதும் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் உள்ள இங்கிள்வுட் நகரில் திங்கட்கிழமை (ஜூன் 29) அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், அது 1-0 எனும் கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெற்றிகண்டது.

ஆட்ட நேரத்தின் முடிவில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடவில்லை. ஆட்டத்தின் இடையே வீணான நேரத்திற்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில், 92வது நிமிடத்தில் ஸ்டெஃபன் யுஸ்டாக்கியோ அடித்த கோல், கனடாவை அடுத்து சுற்றுக்கு அழைத்துச் சென்றது; தென்னாப்பிரிக்காவை வீட்டுக்கு அனுப்பியது.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லக்கூடுமோ பெனால்டி மூலம் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுமோ என்று ரசிகர்கள் பலரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கனடாவின் வெற்றிகோல் வலைக்குள் புகுந்தது. அதன் பிறகு, ஆட்டத்தைச் சமன்செய்யத் தென்னாப்பிரிக்கா கடுமையாக முயன்றது. ஆனால் அது பலன்தரவில்லை.

கனடா, அடுத்து நெதர்லாந்து அல்லது மொரோக்கோவை வரும் சனிக்கிழமை (ஜூலை 4) ஹியூஸ்டனில் சந்திக்கும்.

“தொடர்ந்து நம்பினோம். தொடர்ந்து முயன்றோம். இதைவிட வேறு விதமான முடிவை எங்களால் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்,” என்றார் யுஸ்டாக்கியோ.

கனடிய விளையாட்டாளர்களைக் ‘கதாநாயகர்கள்’ என்று வருணித்தார் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெஸ்ஸி மார்‌‌ஷ்.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துகனடாதென்னாப்பிரிக்காநெதர்லாந்துமொரோக்கோ