இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பரிசுமழை

1 mins read
e1a04098-0329-44f7-82be-0ef2312bc66a
வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி. - படம்: மாலைமலர்

கராச்சி: 19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது இளையர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து 2வது முறையாக மகுடம் சூடியது.

172 ஓட்டங்கள் குவித்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இளையர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதைத் திருவிழா போல் அவர்கள் கொண்டாடினர்.

திங்கட்கிழமை அதிகாலை தாயகம் திரும்பிய அந்த அணியின் வீரர்களுக்கு முதல் நிலைக் குழு வீரர்களுக்கு கொடுப்பது போன்று தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பினர்.

பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், அவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி (இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அத்துடன் அவர்களை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து விருந்தளிக்க உள்ளார். முன்னதாக அவர்களுக்குக் கிண்ணம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்