புதுடெல்லி: இம்மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நிலையில், கடைசி நேரத்தில் வருணுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
காயத்தால் அவதிப்பட்டுவரும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட மாட்டார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதிப்படுத்தியுள்ளது.
அவருக்குப் பதிலாக 23 வயது வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்போது நடந்துவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மூலம்தான் ராணாவும் வருணும் அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்துள்ளனர்.
அதற்குமுன் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வருண் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தொடர் நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
தொடக்கப் பந்தடிப்பாளர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆயினும், ஜெய்ஸ்வால், முகம்மது சிராஜ், ஷிவம் துபே ஆகிய மூவரும் தயார்நிலை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேவை ஏற்பட்டால் அவர்கள் துபாய் சென்று இந்திய அணியுடன் இணைவர்.
தொடர்புடைய செய்திகள்
மொத்தம் எட்டு அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடந்தாலும் இந்திய அணி மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறும்.
‘ஏ’ பிரிவில் பங்ளாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பங்ளாதேஷுடன் இந்திய அணி மோதவுள்ளது.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில் (துணைத் தலைவர்), விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் காப்பாளர்), ரிஷப் பன்ட் (விக்கெட் காப்பாளர்), ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி