தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்: விருதை வெல்லத் துடிக்கும் இந்தியா

3 mins read
a9ee0e3b-8116-4984-9c64-a8663f77beee
இம்முறை சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வீழ்த்த முடியாத அணியாகத் திகழ்கிறது இந்திய அணி. விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் அசத்தல் வெற்றிபெற்றது. - படம்: ஏஎஃப்பி

துபாய்: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

ஆட்டம் துபாயில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடக்கிறது. சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

இம்முறை சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வீழ்த்த முடியாத அணியாகத் திகழ்கிறது இந்திய அணி. விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் அசத்தல் வெற்றிபெற்றது.

அதேபோல், நியூசிலாந்து அணியும் சிறப்பான அணியாக வலம் வருகிறது. இருப்பினும், நியூசிலாந்து பிரிவுச் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

அதைத் தவிர்த்து, அந்த அணி விளையாடிய மற்ற மூன்று ஆட்டங்களிலும் அபார வெற்றிபெற்றது.

இந்தியாவின் பலம்

கடந்த 2023 நடந்த கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ஆனால், இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் அது கிண்ணத்தைப் பறிகொடுத்தது.

அதனால், இந்த ஆட்டத்தில் இந்தியா சற்று கவனமாக விளையாடக்கூடும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் பலமாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா என நான்கு பேரும் போட்டிபோட்டுக்கொண்டு எதிரணிகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பக்கபலமாக வேகப் பந்துவீச்சாளர்களான முகம்மது ‌‌ஷமியும் ஹார்திக் பாண்டியாவும் நிதானமாகச் செயல்படுகின்றனர். இது இந்தியாவுக்குப் பெரிய நம்பிக்கை தருகிறது.

அதேபோல் பந்தடிப்பில் அணித் தலைவர் ரோகித் சர்மா தன்னலமின்றி ஆடி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஓட்டங்கள் குவிக்கிறார். இதனால், ‌‌ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டவர்கள் பொறுமையாக ஓட்டம் குவிக்க முடிகிறது.

பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என அனைத்திலும் இந்தியா முன்னிலை வகிப்பதால் இறுதியாட்டத்தில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

நியூசிலாந்தின் விடாமுயற்சி

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியது. இருப்பினும், பந்தடிப்பில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெற்றியைப் பறிகொடுத்தது.

அதனால் இந்த இறுதியாட்டத்தில் தவறுகளைச் சரிசெய்துகொண்டு நியூசிலாந்து இந்தியாவுக்குக் கடுமையான சவால் கொடுக்கக்கூடும்.

பந்துவீச்சாளர்களுக்கு உறுதுணையாக களக்காப்பாளர்கள் உள்ளதால் ஆட்டத்தில் 20 முதல் 30 ஓட்டங்களை நியூசிலாந்து அணியால் எளிதாகக் கட்டுப்படுத்த முடிகிறது. இது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

ஆடுகளச் சர்ச்சை

இம்முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. அரசியல் காரணங்களால் இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

அது இந்தியாவுக்குச் சாதகமான இடமாக இருப்பதாகச் சில அணியினர் குறைகூறுகின்றனர். ஆனால், அதை இந்தியா மறுத்துள்ளது.

துபாய் பொதுவான இடம்தான். இது அனைவருக்கும் சமமான வாய்ப்பைக் கொடுக்கிறது என்று இந்தியா வாதிடுகிறது.

வெற்றி இலக்கு

துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஒன்றாக உள்ளது. அதனால் ஓட்டங்கள் எடுப்பதில் பந்தடிப்பாளர்கள் தடுமாறுகின்றனர்.

முதலில் பந்தடிக்கும் அணி 280 ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால் அதன் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல் 250 ஓட்டங்களுக்குள் சுருட்டிவிட்டால் இலக்கை விரட்டிச் செல்லும் அணிக்குக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதியாட்டத்தில் நியூசிலாந்தும் இந்தியாவும் மோதின. அதில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்தியா 2002ஆம் ஆண்டு இலங்கையுடன் கிண்ணத்தைப் பகிர்ந்துகொண்டது; 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

இம்முறை கிண்ணத்தை வென்றால் மூன்றாவது முறையாகக் கிண்ணத்தை வெல்லும் முதல் அணியாக இந்தியா சாதனை படைக்கும்.

குறிப்புச் சொற்கள்