துபாய்: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது தொடர்பில் இழுபறி நீடிக்கிறது.
இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நடத்துகிறது.
ஒருநாள் தரவரிசையில் முன்னணியில் உள்ள எட்டு அணிகள் இதில் பங்கேற்கின்றன.
இத்தொடர் பாகிஸ்தானில் வரும் 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடக்க உள்ளது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது.
இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானுக்கு வெளியே துபாயில் நடத்தலாம் என ஐசிசியிடம் இந்தியா வலியுறுத்தியது.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இது குறித்து ஆலோசிக்க ஐசிசி செயற்குழுவின் அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா இதில் காணொளி வாயிலாகப் பங்கேற்றார்.
பி.சி.பி., தலைவர் மோசின் நக்வி நேரில் கலந்துகொண்டார்.
இரு நாடுகளில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. பாகிஸ்தானில் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த வேண்டும் என்பதில் அந்நாடு பிடிவாதமாக உள்ளது.
இதனால் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஐசிசி கூட்டம் இது குறித்து மீண்டும் விவாதிக்கவிருக்கிறது.
இதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஒப்புக்கொள்ளுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு ஐசிசி அழுத்தம் கொடுத்துள்ளது.
அதனால் பாகிஸ்தான் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
ஒன்று இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தானை விட்டுவிட்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வேறு நாட்டில் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
“சிறிது நேரம் நடந்த செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை திட்டமிட்டபடி நடத்துவது குறித்து அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து நல்ல முடிவு எடுப்போம். அடுத்த சில நாட்கள் தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடக்கும்,’’ என்று ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

