தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுப்பு

2 mins read
d3fb00fe-1336-4dcd-b318-6b61fddad430
2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கிண்ணம் வென்றிருந்தது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பாகிஸ்தான் சென்று, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது.

அப்போட்டிகள் வேறு அரங்கில் நடத்தப்பட வேண்டும் என்றும் அது விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் உரிய பங்காளிகளுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், துபாயில் சில போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான அட்டவணையை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) ஏற்கெனவே தயாரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வகையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூரில் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்குச் செல்வதில்லை என பிசிசிஐ முடிவுசெய்துள்ளதால், போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) போட்டி அட்டவணையை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய அட்டவணை எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த ஒருநாள் போட்டித் தொடருக்காக அரங்குகளை மேம்படுத்தும் பணிகளைப் பாகிஸ்தான் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

ஒன்பதாவது முறையாக நடத்தப்படும் இப்போட்டித் தொடரின் ‘ஏ’ பிரிவில் பங்ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

கடைசியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கிண்ணம் வென்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்