சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறும்

1 mins read
6ba27d66-8471-4fb1-a1cd-4f784040ab6c
வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. - படம்: ஊடகம்

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளைத் துபாயில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (பிசிசிஐ) அனைத்துலகக் கிரிக்கெட் மன்றத்திற்கும் (ஐசிசி) நெருக்கமான வட்டாரங்களைச் சுட்டி, ஐஏஎன்எஸ் ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், வேறு காரணங்களுக்காக தனது அணியை அந்நாட்டிற்கு அனுப்ப இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால், அப்போட்டிகளை நடத்துவது தொடர்பில் இழுபறியான சூழல் நிலவியது. இந்நிலையில், இந்திய அணிக்கான போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த பாகிஸ்தான் வாரியம் இணங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதனை ஈடுகட்டும் வகையில், 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின்போது, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பாகிஸ்தானில் நடத்தாததால் தனக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசியும் பிசிசிஐயும் ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்